தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பம் இன்று முதல் தொடங்குகிறது.
நீட் தேர்வு முடிவுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.
நீட் தேர்வு ரிசல்ட்
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில் நீட் தேர்வு முடிவு கடந்த 7ஆம் தேதி வெளியான நிலையில், மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
மருத்துவ கல்லூரிகள்
இந்திய மருத்துவ கவுன்சிலின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள 270 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 41 ஆயிரம் எம்பிபிஎஸ் மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 5,300 அரசு மருத்துவ இடங்கள் உள்ளன. நீட் தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் 6 சதவீதம் குறைந்துள்ளது.
எத்தனை பேர் தேர்ச்சி
கடந்த ஆண்டு 99,610 பேர் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர். அதாவது 2021-ல் 57.43 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்த நிலையில் 2022-ல் 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு 1,32,167 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
ஆன்லைன் விண்ணப்பம்
இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-2023 ஆம் ஆண்டின் மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளுக்கான அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் / சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி ஆகும். மாணவர்கள் https://tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்துவது எப்படி
இந்த ஆண்டு கலந்தாய்வில், மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும். கல்விக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்.