பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நிகழத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர்.
ராவல்பிண்டி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கபரி பஜாரில் வழக்கம்போல் கடைகள் இயங்கிக் கொண்டிருந்தன.
அப்போது, மின்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த வெடிபொருள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால், இப்பகுதியில் தீவிபத்தும் ஏற்பட்டுள்ளது.
இந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர், அந்த மின்கம்பத்தின் அருகில் காய்கறி கடை வைத்திருந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குண்டு வெடித்த பகுதி முழுவதும் மோசமாக சேதமடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சிஜிதுல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், இது பயங்கரவாதத்தின் முயற்சி எனவும், ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவோர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், எந்தவொரு தீவிரவாத அமைப்புகளும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தற்போது வரை பொறுப்பெற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.