காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயம் – தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை..!!

தமிழ்நாடு போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முன்பே சட்டசபையில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது முறையான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போலீசார் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளுக்காக காத்து இருந்தனர். பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இந்த மானியக் கோரிக்கையில் வெளியாகலாம் என்று போலீசார் எதிர்பார்த்து இருந்தனர். அதேபோல் கடந்த 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

காவலர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதஹில், பொது மக்களின் பிரச்சினைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும. காவல் நிலைய அதிகாரி விசாரணை அறிக்கை அந்த செயலில் தரவேற்றம் செய்யப்படும். காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் என்பது போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

அதேபோல் காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும் என்று அறிவிப்பு காவலர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. இது காவலர்களின் பல நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. அதேபோல் காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காத்திட ஏதுவாகவும் தனது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் வார விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும். காவல் ஆளிநர்கள் தற்செயல் விடுப்பு ஒப்புதல் அளிக்கும் மென்பொருள் ( CLAPP ) APP 1 ரூபாய் 10 லட்சம் செலவில் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இது காவலர்களின் பல நாள் கோரிக்கை ஆகும். நாங்கள் மட்டும் விடுப்பே இல்லாமல் வேலை பார்க்கிறோம். இது பணி சுரண்டல் என்று பல முறை காவலர்களின் பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

அனைத்து முக்கிய நாட்கள், பண்டிகை நாட்களிலும் எல்லோருக்கும் விடுப்பு வந்தாலும் எங்களுக்கு மட்டும் பணி இருக்கும். வார விடுப்பு கூட இல்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம். வேறு எந்த துறையிலும் இந்த நிலை கிடையாது. மக்களை காக்கும் எங்களுக்கும் குடும்பத்தோடு நேரம் செலவிட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று காவல்துறையினர் பல வருடமாக கோரிக்கைகளை வைத்து வந்தனர். இதை முதல்வர் ஸ்டாலின் தற்போது நிறைவேற்றி உள்ளார்.

போலீசார் தரப்பில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாருக்கு வாராந்திர விடுப்பு, பிறந்த நாள் விடுப்பு வழங்குவது தொடர்பாக முறையான அரசு ஆணை, வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,

1 காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக்க ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம்செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கேட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்

2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும். ஒய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும்.

3. காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்தநாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்

4. தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி, மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக, சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு
தெரிவிக்கப்பட வேண்டும்.

5. மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வார விடுமுறை மட்டுமின்றி பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் உட்பட அறிவிப்புகள் போலீசாரை பெரிய அளவில் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே