உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை

தமிழ்நாட்டில் சித்திரைத் திருநாள் போலவே, கேரளத்தில் (நம்முடைய ஆவணி மாதத்தை) சிங்கம் என்பார்கள். சிங்கம் மாதம்தான் முதல் மாதமாகவும் இருக்கிறது.

சாதி, மதம், மொழி கடந்து கேரளத்தில் இருக்கும் அத்தனை மக்களாலும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் வண்ணமிகுப் பண்டிகைதான் ஓணம் பண்டிகையாகும். நம்மூர் தீபாவளி போலத்தான் ஓணம் பண்டிகையையும் கொண்டாடப்படுகிறது.

“கானம் விற்றாவது ஓணம் உண்” (கானம் – நிலம்) என்ற பழமொழி ஓணம் பண்டிகைக்காக இருக்கிறது. ஒணம் பண்டிகை எதனால், எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாற்றை முதன் முதலில் தெரிந்துகொள்வோம்.

ஓணம் திருவிழாவில், அத்தப்பூக் கோலம் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டின் முன்பும் போடுவார்கள். அத்தப்பூக் கோலம், மகாபலி மன்னனை வரவேற்கத்தான் அந்த அத்தப்பூக் கோலம் போடப்படுவதாக ஐதீகம். ஆவணி மாதத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். அதனால், ஓணம் பண்டிகையை பூக்களின் திருவிழாவாகவும் கொண்டாடுகிறார்கள். மேலும், ஒவ்வொரு வீட்டின் ஆண் மகனும், அத்தப் பூவைப் பறித்துக் கொண்டு வருவார்கள். அவர்கள் கொண்டு வரும் அத்தப் பூவைத்தான், கோலத்தின் நடுவில் வைக்க வேண்டும் என்பதும் ஐதீகம். இதில், இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. முதல் நாள் ஒரே கலரில்தான் பூக்கள் வைக்கப்படும். இரண்டாவது நாள் இரண்டு கலரில், மூன்றாவது நாள் மூன்று கலர், நான்காவது நாள் நான்கு கலர் என 10 நாட்களும் 10 வகையில் பூக்கள் வைக்கப்படும். 10 ஆவது நாள் 10 விதமான பூக்களையும் வைப்பார்கள்.

சிவன் கோயில் ஒன்றில் விளக்கு அணையும் நிலையில் இருந்துள்ளது. அப்போது கோயிலுக்குள் எலி ஒன்று நுழைந்துள்ளது. அந்த எலி அங்கிருந்த விளக்கின் மீது ஏறி, அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது எலியின் வால், திரியின் மீது பட்டு தூண்டப்பட்டது. இதனால், அந்த விளக்கு மிகவும் பிரகாசமாக எரியத் தொடங்கியுள்ளது. தன்னையும் அறியாமல் செய்த இந்த நற்காரியத்திற்காக அந்த எலியை, அடுத்தப் பிறவியில் சக்கரவர்த்தியாகப் பிறக்க சிவபெருமான் அருள் புரிந்தார். தெரியாமல் செய்யும் நல்வினைக்கும் கடவுளின் அருள் மிகப் பெரியதாக அமையும் என்பதையே இந்தப் புராணம் உணர்த்துகிறது.

சக்கரவர்த்தியாகப் பிறந்து நாடு போற்றும் அளவுக்கு இருந்த அந்த சக்கரவர்த்தியைத்தான், மஹா விஷ்ணு ஆட்கொண்டு அருள் புரிந்து உலகம் போற்றும் விதமாக அந்த நாளையே, கேரள மக்கள் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். சிங்கம் மாதத்தின் அஸ்தம் நட்சத்திரத்தில் இருந்து திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த திருவிழா கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஓணம் பண்டிகைக்கு ஆறு சுவைகளில் கசப்புத் தவிர மற்ற சுவைகளில் 64 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள். அதில், புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன்,பால் பாயாசம், அரிசி சாதம், தோரன், சர்க்கரைப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு, பப்படம், சீடை, ஊறுகாய், அவல் பாயாசம், மாவு பாயாசம் என ஏராளமான உணவு வகைகளைச் செய்வார்கள். எல்லா உணவுகளிலும் தேங்காய் நிச்சயமாக சேர்க்கப்பட்டு இருக்கும். சாப்பிடப்படும் உணவுகள் செரிப்பதற்காக இஞ்சிப்புளி, இஞ்சிக்கறி சேர்க்கப்படுகிறது.

பருவ மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமையும், செழுமையும் நிறைந்து காணப்படும் சிங்கம் மாதத்தை கேரள மக்கள் “அறுவடைத் திருநாள்” என்றும் போற்றி வழிபடுகிறார்கள். முந்தையக் காலங்களில் ஓணம் பண்டிகை தினம் அறுவடைத் திருநாளாகவே கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகவும் வரலாற்றுச் சிறப்புகள் தெரியப்படுத்துகின்றது. ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் விடியற்காலையில் எழுந்து குளித்து வழிபாடு செய்வார்கள். அன்றைய நாள் கசவு என்று சொல்லக் கூடிய சுத்தமான வெள்ளை நிற ஆடையைத்தான் உடுத்துவார்கள்.

மேலும், பெண்கள் அனைவரும் வீட்டின் முன்பு பல வகையான பூக்களைக் கொண்டு அழகழகான கோலங்களைப் போடுவார்கள். சின்னக் குழந்தைகள் ஊஞ்சல் கட்டி ஆடுவார்கள். ஓணம் பண்டிகையின் போது கேரளத்தில் படகுப் போட்டிகள் நடத்துவர். இந்தப் படகுப் போட்டி விசேஷமாக இருக்கும். ஓணம் பண்டிகையின் போது பல்வேறு விதமான வகைகளில் உணவுகள் தயாரிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள்.

உணவு வகைகளில் பாயாசத்தின் வகையே 10 விதமாக இருக்கும். ஓணம் பண்டிகை கொண்டாடி, பெருமாளை வணங்கினால், பணிவும் குணமும் வளரும். செல்வமும் செழித்து உயர்வடைவார்கள்.

கேரளத்தில் உள்ள திருக்காட்கரை என்ற இடத்தில்தான் ஓணம் பண்டிகையுடன் தொடர்புடைய கோயில் இருக்கிறது. இந்தக் கோயிலில் மஹாவிஷ்ணு, வாமன அம்சமாக எழுந்தருளியிருக்கிறார். அவர் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நான்கு கரங்களுடன், சங்கு, சங்கரம், கதாயுதம், தாமரை ஆகியவற்றை ஏந்தியபடி நிற்கும் இந்தப் பெருமாளை “திருக்காட்க்கரை அப்பன்” என்று அழைப்பார்கள். பெருஞ்செல்வநாயகி, வாத்சல்யவல்லி என்பதுதான் தாயாரின் திருநாமங்களாகும்.

மேலும், இந்தக் கோயிலில் சாஸ்தாவிற்கும், மஹாலெஷ்மிக்கும் தனித்தனியாக சன்னதிகள் இருக்கிறது. கேரளப் பகுதியில் அதிகமாக விளையும் அதிக சுவையுள்ளது நேந்திரம் வாழைப்பழம். நேந்திரம் வாழைக்கும், திருக்காட்க்கரை கோயிலுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. அப்பகுதியின் விவசாயி ஒருவர் தனது வயலில் வாழை மரங்கள் பயிரிட்டு வந்துள்ளார். ஆனால், அந்த மரங்கள் வளர்ந்ததும் எந்தப் பலனையும் தரவில்லை. அழிந்தும் போய் விட்டது. இதுபோல் பல முறை நடந்து விட்டதால் அந்த விவசாயி மனம் உடைந்தார். உடனே அந்தப் பக்தர் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு வாழைக்குலையை திருக்காட்க்கரை அப்பனுக்குச் சார்த்தினார். தனது குறையைச் சொல்லியும் அழுதுள்ளார்.

பக்தரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பெருமாள், அருட்பார்வையை வாழை மரத்தின் மீது செலுத்தினார். அதன்பிறகு, வாழை மரங்களில் குலை குலையாக காய்த்துத்தள்ளியது. பெருமானின் நேந்திரங்களின் (நேந்திரம் என்றால், கண் பார்வை என்று அர்த்தம்) அருட்பார்வை பெற்று செழித்து வளர்ந்த வாழைக் குலைகள், அன்று முதல் ”நேந்திரம் வாழை” எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. காலப்போக்கில் நேந்திரம் என அழைக்கப்பட்டு வருகிறது.

பெருமாளை நேர்ந்து கொண்டு இந்த நேந்திரம் வாழைப்பழத்தை படைத்தால் நேர்ந்தது நேர்ந்த படியாக நடக்கும். கேரள விழாக்களில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை யானைகளுக்கு என தனி இடம் இருக்கிறது. ஓணம் திருவிழாவில் யானைத் திருவிழா என்றே ஒரு நாள் திருவிழா நடத்தப்படுகிறது. 10 ஆம் நாளான திருவோணம் அன்று, விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன கவசங்களாலும், பூ தோரணங்களாலும் யானைகள் அலங்காரம் செய்து, வரிசையாக நகரத்தின் வீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். மேலும், கேரளத்தின் பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டிகள் என 10 நாட்களும் பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்படும்.

படகுப் போட்டியில் அனைவரும் மலையாளப் பாடலைப் பாடிக் கொண்டே துடுப்பை முன்னும், பின்னும் செலுத்துவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நிச்சயமாக ஒரு தடவையாவது ஓணம் பண்டிகையின் போது 10 நாள்கள் கேர்ளத்தில் தங்கி, ஓணம் திருவிழாவைப் பார்க்க வேண்டும். கேரள மக்கள் உட்பட ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ஓணம் திருவிழா நல்வாழ்த்துக்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே