பாசனத்திற்காக வைகை அணையை திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்

திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக திங்கள்கிழமை வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் மூலம் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது.

இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடக்கத்தில் துவங்கும்.

அப்போது மதுரை, திண்டுக்கல், மாவட்ட விவசாய நிலங்களுக்கான முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 

ஆனால் இந்த ஆண்டு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே கேரள மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது.

இதன்காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

இதனால் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனை அடுத்து தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியாக உயர்ந்துள்ளது.

வைகை அணை நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்காக 900 கன அடி வீதம், 45 நாள்களுக்கும், 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி திங்கள்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.பி.எம் சையது கான் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது வைகை அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே