8 மாதங்களுக்கு பின் ஒமர் அப்துல்லா விடுதலை

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத்தலைவருமான உமர் அப்துல்லா 8 மாதத் தடுப்புக் காவலில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு.

இந்த நடவடிக்கை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது காஷ்மீர் நிர்வாகம்.

அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.

ஏறக்குறைய 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை கடந்த 13-ம் தேதி காஷ்மீர் நிர்வாகம் விடுவித்து உத்தரவிட்டது.

ஆனால் பரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா விடுவிப்பு குறித்து எந்த அறிவிப்பையும் காஷ்மீர் நிர்வாகம் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் உமர் அப்துல்லா மீது விதிக்கப்பட்டிருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்த காஷ்மீர் நிர்வாகம் அவரை விடுவித்தது.

ஏறக்குறைய 232 நாட்கள் தடுப்புக்காவலில் உமர் அப்துல்லா இருந்தார்.

இதற்கிடையே உமர் அப்துல்லாவின் சகோதரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில் தனது சகோதரரை விரைவாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி இருந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் உமர் அப்துல்லாவை விடுவிக்கும் எண்ணம் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் மனுத்தாக்கல் செய்யக்கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், உமர் அப்துல்லாவை விடுவிப்பதாக இருந்தால் விரைவாக விடுவியுங்கள்.

காஷ்மீரில் இயல்புநிலை வந்துவிட்டதே. உமர் அப்துல்லா எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்து அவரை விடுக்கலாமே எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, ஒமல் அப்துல்லா மீது போடப்பட்டிருந்த பொது பாதுகாப்பு சட்டம் விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று(மார்ச் 24) விடுதலை செய்யப்பட உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே