ஜூன் 1-ஆம் தேதி முதல் துரந்தோ, சம்பா்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூா்வா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்கள் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் போக்குவரத்து அட்டவணையை ரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்த ரயில்களுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (மே 21) காலை 10 மணி முதல் தொடங்கியது.
200 ரயில்களில் தமிழகத்திற்கு ஒரு ரயில் சேவைக் கூட இல்லை என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கம் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில், புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்துச் செல்வதற்கு மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அது தவிர 15 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன.
இதனிடையே, ஜூன் 1-ஆம் தேதியில் இருந்து ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத 2-ஆம் வகுப்பு பெட்டிகளைக் கொண்ட 200 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஏசி வசதி அல்லாத, தேர்வு செய்யப்பட்ட 200 ரயில்களுக்கான அட்டவணையை புதன்கிழமை வெளியிட்டது ரயில்வே துறை.
அதில் தமிழகத்திற்கான எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை.
இந்நிலையில், 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை காலை 10 மணி முதல் ஐஆா்சிடிசி இணையதளம், செல்லிடப்பேசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கியது.
முன்பதிவு தொடங்கியதும் 200 ரயில்களில் தமிழகத்திலிருந்து ஒரு ரயிலும் இயக்கப்படவில்லை என்பதை அறிந்து பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
டிக்கெட் கட்டணத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. இருப்பினும், பொது பெட்டிகளில் இரண்டாம் வகுப்புக்குரிய கட்டணம் வசூலிக்கப்படும்.
தட்கல், பிரீமியம் தட்கல், முன்பதிவு இல்லாத டிக்கெட் ஆகியவற்றைப் பெற முடியாது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்பதிவு செய்வோருக்கு ஆர்.ஏ.சி, காத்திருப்போர் பட்டியலுக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும்.
எனினும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் ரயில்களில் பயணம் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.