சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் பப்ஜி விளையாட்டு செயலி மீண்டும் வரவிருக்கிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லைப் பிரச்சனை காரணமாக சீன பொருட்களை புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வந்தது.
அதனை அடுத்து டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம் உள்பட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் கூற்றுப்படி, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் மொபைல் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
சீன நிறுவனமான டெண்செண்ட் கேம்ஸ் பங்குகளை கொண்டுள்ளதால் தென் கொரிய நாட்டில் தயாரிக்கப்பட்ட பப்ஜி விளையாட்டிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து, பப்ஜி பிரியர்கள் மிகவும் சொகத்தில் ஆழ்ந்தனர்.
மேலும், பப்ஜி விளையாட்டு தடை தொடர்பாக பல மீம்களையும் பதிவிட்டனர்.
இந்த நிலையில், பப்ஜி நிறுவனம், டென்செண்ட் நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பப்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை விவகாரத்தை நாங்கள் கவனித்து வருகிறோம்.
பப்ஜி பயனாளர்கள் எங்களுக்கு மிகுந்த ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
ஆனால், அதே சூழலில் இந்திய அரசுடன் சேர்ந்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
இதற்கிடையே பப்ஜி இந்தியா, டென்செண்ட் கேம்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விலக்கிக் கொள்கிறது என்பதையும் அறிவித்துக் கொள்கிறோம். எங்கள் நிறுவனமே இந்தியாவில் பப்ஜியை வெளியிட அனைத்து பணிகளையும் செய்து வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.