புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் ராஜிநாமா கடிதம் கொடுத்துவிட்டோம், இனி முடிவு செய்ய வேணடியது அவர்தான் என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததை அடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்துள்ளோம்.

இனி முடிவு செய்ய வேண்டியது ஆளுநர்தான்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களை ராஜிநாமா செய்ய வைத்து, நியமன உறுப்பினர்கள் 3 பேரை நியமித்து புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு செய்த மத்தியில் ஆளும் பாஜக அரசையும், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அதிமுகவுக்கும் புதுச்சேரி மாநில மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், அரசு கவிழ்ந்ததை அடுத்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை வழங்கினார் நாராயணசாமி.

முன்னதாக 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ராஜிநாமாவைத் தொடர்ந்து பேரவையில் பலமிழந்த ஆளும் கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் என்.ரங்கசாமி தலைமையில் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதை பரிசீலித்த துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், முதல்வா் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி, பிப். 22-ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டாா்.

அதன்படி, புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து பேசிய நாராயணசாமி, மத்திய பாஜக மற்றும் புதுச்சேரி எதிர்க்கட்சிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேறியதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனால், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை நாராயணசாமி அளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே