பாஜக போல் அல்ல; மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும்: ராகுல் காந்தி உறுதி

பாஜகவைப் போல் அல்ல காங்கிரஸ் கட்சி. நாங்கள் மக்களிடம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்குக் கடந்த 27-ம் தேதி தேர்தல் நடந்தது. 2-வது கட்டமாக 39 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

அசாமில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிப்போம், மாதத்துக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், மாதத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இந்தத் தேர்தல் பிரச்சாரத்துக்காக 2 நாட்கள் பயணமாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்திருந்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் குவஹாட்டியில் உள்ள புகழ்பெற்ற நிலாச்சல் மலைப்பகுதியில் உள்ள சக்தி பீடமான காமகாய கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக, அசாமின் சில்சார், ஹப்லாங், போகஜன் ஆகிய பகுதிகளுக்கு ராகுல் காந்தி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கடும் மழை பெய்து வருவதையடுத்து, அங்கு செல்லும் திட்டத்தை ராகுல் காந்தி கைவிட்டார்.

இந்நிலையில் காமக்யா கோயிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”பாஜகவைப் போல் காங்கிரஸ் கிடையாது. தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றும். நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு அளித்துள்ள 5 உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம். உறுதிமொழிகளுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியும்தானே.

பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். விவசாயிகளுக்கான பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்தோம்.

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் ரூ.365 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

இதுமட்டுமல்லாமல், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம், மாதத்துக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், மாதத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே