தாம் தலைமறைவாக இருப்பதாக தவறான தகவல்களை பரப்பி வருவதாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் முதலிடம் பிடித்த திருவராஜூ விளக்கமளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரை சேர்ந்த பட்டதாரியான திருவராஜூ ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு கொண்டே குரூப் 4 தேர்வு எழுதினார்.
கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து தொடர்சியாக 7 முறை குரூப் 4 தேர்வு எழுதி வந்த திருவராஜூ, அண்மையில் நடந்த தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் தேர்வெழுதிய ராமநாதபுரம் மையத்தில் தேர்வெழுதியவர்களில் அதிக பேர் தேர்ச்சியடைந்ததும் சர்ச்சையை கிளப்பியது.
இதனால் மாநில அளவில் முதலிடம் பிடித்த திருவராஜூ தலைமறைவானதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பேட்டியளித்த திருவராஜூ, தாம் தலைமறைவாகவில்லை எனவும் சொந்த ஊரில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது குறித்த விசாரணையை எதிர்கொண்டு தாம் குற்றமற்றவன் என நிறுபிப்பேன் எனவும் கூறினார்.