சென்னையின் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்…!

நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2500-க்கும் மேற்பட்டோருக்கு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதில் சுமார் 1200 பேருக்கு மேல் கொரோனா தொற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். 29 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் என பலரும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறார்கள்.

இதனிடையே ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் தங்கி கூலி வேலை பார்த்து வந்த வெளிமாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதி அளிக்கக்கோரி வேளச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் உள்ளிருக்கும் போராட்டம் நடத்துவதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த சங்கர் நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதேபோல கிண்டி, முகப்பேர் மற்றும் பல்லாவரம் ஆகிய இடங்களிலும் வட மாநிலத்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே