வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை மாநகரையே கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் புரட்டிப்போட்டது. மழை காலங்களில் சென்னையில் நீர் தேங்கி கிடப்பதும், வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை காலத்தில் ஒக்கி புயல் ,வர்தா புயல், கஜா புயல் போன்றவை உருவாகி தமிழகத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. இவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைப்புகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னதாகவே ஏரிகள். நீர்நிலைகள் போன்றவை தூர்வாரப்பட்டுள்ளன.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஏற்கனவே கடந்த மாதம் 24ஆம் தேதி வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு ,சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் சவால்களை திறம்பட கையாள்வது, நீர்நிலைகள் ,கால்வாய்கள் அணைக்கட்டு கதவுகள் கரைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே