ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார். என்ன புரட்சி செய்தார் சசிகலா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகர் எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கு அதிமுக கொடியுடன் காரில் சென்ற சசிகலா எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார்.
அந்த கல்வெட்டில் “கழக பொதுச்செயலாளர் சசிகலா” என இருந்தது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா தன்னை கழக பொது செயலாளர் என்று எந்த தார்மீக அடிப்படையிலும், சட்டபடியாகவும் அறிவித்துக்கொள்ள முடியாது. இது தேர்தல் ஆணையத்திற்கு எதிரானது.
இதற்கு கட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். மீசை வைத்தவர்கள் கட்டபொம்மன் ஆகி விட முடியுமா..? கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆகி விடுமா..?
ஜெயலலிதா நினைவிடத்திற்கு 8 மாதங்களாக எட்டிப்பார்க்காத சசிகலா நேற்று வந்துள்ளார், இனி அடுத்த ஆண்டு தான் வருவார். என்ன புரட்சி செய்தார் சசிகலா? என கேள்வி எழுப்பினார்.
1996-ல் சசிகலாவை சேர்ந்தவர்களால் தான் அதிமுக தோல்வியுற்றது. சசிகலா குடும்பம் மட்டும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். அவர்களின் வாழ்க்கை நிலை உயர வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். கட்சிக்காரர்களை சுரண்டி கட்சிக்காரர்களை சித்திரவதை செய்து, அந்த அளவிற்கு கொடுமைகளை எல்லாம் கட்சிக்காரர்கள் அனுபவித்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வானத்தில் குதித்த அவதாரம் எடுத்தது போல நான் தான் புரட்சித் தாய் என்று சொன்னால், தமிழ்நாட்டிலேயே எம்.ஜி.ஆர் அவர்கள்தான் புரட்சித்தலைவர், ஜெயலலிதா அவர்கள் தான் புரட்சித்தலைவி வேறு யாரும் தாய் கிடையாது என தெரிவித்தார்.