தென்கொரியா மீது தாக்குதல் நடத்த தயாராகும் வடகொரியா!

தென் கொரிய மக்கள் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரிய தீபகற்பத்தில் கடந்த 1950-53ம் ஆண்டு வரை போர் நடந்தபோது, தென் கொரியா, வட கொரியா நாட்டினர் எல்லையில் பலூன்களில் துண்டு பிரசுரங்களை அனுப்பியும் புதுவிதமாக சண்டையிட்டனர். குறித்த புதுவித சண்டையானது மக்களின் மனதை பாதித்து, உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். இது,கொரிய நாடுகளின் பாரம்பரிய சண்டையாக இருந்து வருகிறது.

இதற்கிடையே, பரம எதிரிகளாக இருந்த வடகொரியாவும், தென் கொரியாவும் சில ஆண்டுகளுக்கு முன் நட்பாகின. பின்னர், இனி துண்டு பிரசுர சண்டையில் ஈடுபட வேண்டாம் என 2018ல் ஒப்பந்தமும் செய்து கொண்டன. இந்நிலையில், வடகொரியாவில் இருந்து தென் கொரியாவிற்கு தப்பிச் சென்ற சிலர், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை விமர்சித்து தென் கொரியா எல்லையில் கடந்த மே மாத இறுதியில் துண்டு பிரசுர பலூன்களை பறக்க விட்டனர்.

5 லட்சம் துண்டு பிரசுரங்கள் பறந்து வந்ததால் ஆத்திரமடைந்த வடகொரியா, சில நாட்களுக்கு முன்பு, தனது எல்லையில் உள்ள கொரிய தகவல் தொடர்பு அலுவலகத்தை குண்டு வைத்து தகர்த்தது. அதோடு, 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. தென் கொரியாவுக்கு பதிலடி தர வேண்டிய நேரம் வந்தாகி விட்டதாகவும் அறிவித்தது.

தற்போது, வடகொரியாவில் தென் கொரியாவுக்கு எதிராக 1.2 கோடி துண்டு பிரசுரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை 3000 பலூன்களில் கட்டி அனுப்பும் முடிவில் வடகொரியா உறுதியாக உள்ளது. இதனால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் உளவியல் மோதல் உருவாகும் நிலை ஏற்படலாம் என்றும், வடகொரியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் தென் கொரியா மன்றாடி, வலியுறுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே