புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக, பிரிட்டன் விமானங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வரை இந்தியா வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் லண்டன் உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு நேற்றிரவு முதல் விதித்துள்ளது.

ஏற்கெனவே உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாக புதிய வகை வைரஸ் பரவும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் மீண்டும் அதிகமான கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய வகை வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக ஐரோப்பிய நாடுகள் பலவும் பிரிட்டனுக்கான வான்வழி மற்றும் தரைவழி எல்லையை மூடிவிட்டன.

இந்நிலையில், பிரிட்டன் விமானங்கள் நாளை நள்ளிரவு 11.59 மணி முதல் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை இந்தியா வர தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை தடை செய்யக் கோரி, மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறும்போது, “தற்போதைய நிலையில், அரசு முழுமையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

என்னைக் கேட்டால், தற்போதைக்கு எந்த விதத்திலும் பீதியடையத் தேவையில்லை” என்றார்.

கனடா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்து சேவையை இன்று காலையே தற்காலிகமாக நிறுத்தியதும் கவனிக்கத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே