கல்லூரி ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!!

தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கலை & அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணியில் கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாகவே பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காகக் கடந்த ஆண்டு பள்ளி ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அமைக்கத் தனியாகக் குழு உருவாக்கப்பட்டது.

இந்த குழு தங்களுடைய அறிக்கையை அரசிடம் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நாளை 7-ம் தேதி பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சார்பில் வெளியிடப்படவுள்ளது.

கல்லூரிகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளைப் போல் கல்லூரிகளுக்கும் புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் முதலாவதாகக் கல்லூரி மாணவர்கள் நேரடி வகுப்புகளைப் போன்றே, ஆன்லைன் வகுப்புகளிலும் (Dress Code) பின்பற்றி இருக்கவேண்டும்.

ஆன்லைன் வகுப்புகளைக் கண்காணிக்க அந்தந்த கல்லூரிகளில் தனியாகக் குழு அமைக்கப்படவேண்டும். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளை முழுவதுமாக பதிவுச் (Record) செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆன்லைன் வகுப்புகள் மீதான புகார்கள் அளிக்க கல்லூரிகளில் தனியாக புகார் பிரிவு உருவாக்கப்படவேண்டும். இந்த புகார் குழுவில் மருத்துவர், கல்வியாளர், மனநல நிபுணர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கவேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் தடையில்லாமல் மாணவர்களிடம் சென்றடைய இணைய வசதியை வேகப்படுத்தவேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகள் இந்த கல்வியாண்டிலேயே (2021-2022) அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட கல்லூரிகளுக்கான புதிய விதிமுறைகளை உள்ளடக்கிய வழிகாட்டு நெறிமுறைகளின் வரைவு அறிக்கையை வரும் 11-ம் தேதிக்குள் கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக அரசிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே