7.5% இட ஒதுக்கீடு இல்லாவிட்டால் அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிக்கத் தொடங்கி விட்டனர்;
அவர்களுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டதால், எந்த சலுகையும் தேவையில்லை என்று திட்டமிட்டு ஒரு பரப்புரை முன்னெடுக்கப்படும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கருகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
7.5% இட ஒதுக்கீடு என்ற உயிர்த்தண்ணீர் உடனடியாக ஊற்றப்படவில்லை என்றால், அரசு பள்ளி மாணவர்களில் ஒருவர் கூட மருத்துவப் படிப்பில் சேர முடியாது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு வரை அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்;
ஆனால், இப்போது ஒற்றை இலக்கத்தில் கூட அவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடிவதில்லை என்பது உண்மை.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க இந்த ஒற்றை தேவை போதுமானது.
அடுத்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களில் 60 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களும், நீட் தேர்வு எழுதுபவர்களில் 20 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்களும் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதை விடக் குறைவாக 7.5% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
ஆகவே இட ஒதுக்கீட்டின் அளவும் சரியானது தான். 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க இந்த காரணிகளைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை.
ஒரு சில மணி நேரங்களில் இது குறித்து முடிவெடுக்க முடியும் எனும் போது, 4 மாதங்களுக்கும் மேலாக 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் முடிவெடுக்காமல் ஆளுனர் வீண் தாமதம் செய்வது நியாயமற்றது.
7.5% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசு பள்ளிகளில் படித்த சுமார் 400 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
எனவே, இனியும் தாமதிக்காமல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.