எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்பட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வரும் ஜுலை 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-21- ஆண்டுக்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு மே 3-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், உயர் கல்விநிறுவனங்களை மூட மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த மார்ச் 28ம் தேதி அறிவித்தது.

நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் 15 லட்சத்து 93 ஆயிரத்து 452 பேரும், அதில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 502 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள்.

இவர்கள் நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்று தெரியாமல் அரசின் உத்தரவை எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங், ஜேஇஇ மெயின் மற்றும் நீட் தேர்வுக்கான தேதியை அறிவித்துள்ளார்.

இதன்படி நீட் தேர்வு நாடுமுழுவதும் வரும் ஜுலை 26ம் தேதி நடைபெறும்.

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் வரும் ஜுலை 19ம் முதல் ஜுலை 23க்குள் நடைபெறும் என்றார்.

இதற்கிடையே ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் ஆகஸ்டு மாதத்தில் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

நீட் தேர்வுகள், பொறியியல் கல்வி நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் விரைவில் அனைத்து பல்கலைக்கழகங்களும் செமஸ்டர் தேர்வு தேதிகளை அறிவிக்கும் என தெரிகிறது.

செப்டம்பரில் நாடு முழுவதும் கல்லூரிகளை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே