திட்டமிட்டபடி நீட் மற்றும் JEE தேர்வுகள் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

ஏற்கனவே குறிப்பிட்டபடி, செப்டம்பர் மாதம் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வுகள் நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை இன்று உறுதிபட தெரிவித்துள்ளது.

ஜேஇஇ, நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகள் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.

ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு தேர்வுகள் தள்ளி போகின.

ஆனால் இப்போதும் நோய்கள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் தேர்வுகள் நடத்த வேண்டாம், தேர்வுகளை ஒத்திப் போட வேண்டும் என்று 11 மாணவர்கள் சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

கடந்த திங்கள்கிழமை இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. 

இருப்பினும், மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் வாயிலாகவும், கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.

பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, இப்போது தேர்வுகளை நடத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சூழ்நிலை உருவாகும் என்பதால், அதைத் தள்ளிப் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதுபோன்ற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால், தேர்வுகள் தள்ளி போகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜேஇஇ, நீட் ஆகிய தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதியும் நீட் (யூஜி) தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகளை நடத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்துவிட்டதாகவும்; மாணவர்களுக்கு கிருமிநாசினி வழங்குவது உள்ளிட்ட பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், ஒவ்வொரு மாணவருக்கும் முகக் கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே