காயமில்லாத இடத்திலும் வலியை உண்டாக்கும் நரம்பு வலி காரணங்களும், அறிகுறிகளும்!

சேதமடைந்த நரம்புகளால் நரம்பு சார்ந்த வலி உண்டாகிறது. நரம்பு வலி என்று சொன்னாலும் இது தரும் உபாதை அதிகமானது.
உடலில் இருக்கும் நரம்புகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உண்டு. உடல் உணர வேண்டிய தகவல்களை மூளைக்கும், சென்று சேர வேண்டிய பாகங்களுக்கும் கொண்டு செல்லும் முக்கிய பணி நரம்பை சேர்ந்தது. இந்த நரம்பு சேதாரம் அடையும் போது சாதாரண அழுத்தத்திலும் தொடுதலிலும் வலி உபாதை அதிகமாக தெரிகிறது. நரம்புகள் சுருங்கி ரத்த ஓட்டம் பாதிப்படையும் போது நரம்பு வலுவிழந்து தன்னுடைய வேலையை செய்யமுடியாமல் திணறும். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் இவை குணப்படுத்தக்கூடியதே ஆனால் அலட்சியம் செய்தால் சிகிச்சையும் தீவிரமாக பெறவேண்டி இருக்கும். நரம்பு வலி இதற்கான அறிகுறிகள் காரணங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.
​நரம்பு வலி என்பது
நரம்பு வலி என்பது நரம்பு திசுக்களில் காயம் உண்டாகும் போது அல்லது உடலில் ஏற்படும் கோளாறுகளாலும் நரம்பில் வலி உண்டாகக்கூடும். இது நாள்பட்ட வலியும் கூட. நரம்புகளுக்கு உள்ளே சிறிய இழைகளும் உண்டு. நரம்புக்கு இவைதான் பாதுகாப்பை வழங்குகிறது எனினும் இதை மீறி தான் நரம்புகளில் சேதாரம் உண்டாகிறது. இவை பெரும்பாலும் வலியை உண்டாக்கும் என்றாலும் சமயங்களில் எரிச்சலையும் உண்டாக்கும். இது இடைவிடாமலும் இருக்கலாம். அல்லது அவ்வபோதும் இருக்கலாம்.

உடலில் வலி இருக்கும் இடங்களுக்கு அசாதாரணமாக சமிக்ஜை அனுப்பும் போது அவை உடலினுள் உள்ளே சென்று வலியில்லாத இடங்களிலும் காயமில்லாத இடமாக இருந்தாலும் அங்கு வலியை உண்டாக்குகின்றன. இந்த வலி அன்றாட வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்குகிறது. நரம்பு வலி பாதிப்புக்குள்ளானவர்கள் அந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது அறியாமலே இருக்கிறார்கள்.

அறிகுறிகள்
நரம்பு வலி உடலில் எங்கு வேண்டுமானாலும் வரக்கூடும். இடுப்பு பகுதி, முதுகு பகுதி, தாடை பகுதி என்று எங்கு வேண்டுமானாலும் வரக்கூடும். ஆனால் இந்த பிரச்சனை வந்தால் வலியின் உபாதை அதிகமாக இருக்கும். இவை வரும் இடம் பொறுத்து, வலி வரும் இடமும் மாறுபடும்

சிலருக்கு கெண்டைக்காலில் இருந்து வலி பரவக்கூடும். கால் திடீரென்று மரத்து போகும். தொடையிலிருந்து சுளீரென்று உள்ளிருக்கும் நரம்பு இழுக்கும். சிலருக்கு காலையில் எழுந்தது முதல் முதுகுப்பகுதியில் படரும் வலியானது தொடை வரை நீண்டு பிறகு படிப்படியாக பின்கால் வரை நீளும். எங்கு வலியாக இருந்தாலும் அந்த இடம் மரத்து போவதுதான் அறிகுறியாக இருக்கும். சிலருக்கு வலி தீவிரமாக இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றி சுரீரென்று குத்துவது போன்ற வலி உண்டாகும். வலி சிறிது சிறிதாக அதிகரிக்க தொடங்கும்.

பலரும் இந்த அறிகுறிகள் வாயு கோளாறு மற்றும் செரிமானக்கோளாறு என்றும் நினைத்துவிடுவார்கள். ஆனால் இவை நரம்பு வலிக்கான அறிகுறிகள் மட்டுமே.

காரணங்கள்
நோய், காயம் , தொற்று மற்றும் மூட்டுகளில் தேய்மானம் போன்றவையே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அறுவை சிகிச்சையின் போது நரம்புகளின் மீது உண்டாகும் அழுத்தம் நரம்பு சார்ந்த வலிகளை கொண்டிருப்பதும் ஒரு காரணம். காயம் காரணமாக நரம்புகளின் மீது அழுத்தம் உண்டாகும் போதும் வலி உண்டாகும்.

முதுகுத்தொண்டு சேதாரம், மூளை சிதைவுகள் உடலில் உண்டாகும் நோய்த்தொற்று போன்றவற்றாலும் கூட நரம்புகளில் வலி உண்டாகக் கூடும். சிறுநீரக கோளாறு இருந்தாலும், நீரிழிவு பிரச்சனைக்கு உட்பட்டு கட்டுக்குள் வைக்காமல் இருந்தாலும், நரம்புகளின் அருகில் இருக்கும் தசை நார்கள், ரத்தக்குழாய்கள், கட்டிகளால் நரம்புகளின் மீது அழுத்தம் ஏற்படுதல், அக்கி, ஹெச்ஐவி தொற்று முதலான தொற்றுகளாலும் நரம்பு வலி உண்டாகும்.

சமயங்களில் புற்றுநோய் பாதிப்பிற்கான அறிகுறியாகவும் நரம்புகளில் வலி உண்டாக காரணமாக இருக்கலாம். நரம்பு வலியால் அவதிப்படுபவர்களில் 30% நீரிழிவு நோயாளிகள் தான். நீரிழிவு இருப்பவர்கள் பொதுவாகவே உணர்வின்மை, எரியும் தன்மை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இவை தவிர நாள்பட்ட ஆல்கஹால் அருந்துபவர்களுக்கும் நரம்புகளில் சேதம் உண்டாகி வலியை உண்டாக்குகிறது.

இன்னும் சிலருக்கு வைட்டமின் பி குறைபாடு, தைராய்டு போன்றவையும் கூட காரணமாகிறது.

​தீர்வு
நரம்பு சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு நீங்களாக செய்துகொள்ள முடியாது. ஆனால் அதிக உபாதை தரும் வலியை கட்டுப்படுத்த முடியும். அதுவும் ஆரம்பத்தில் வலி உபாதை இருக்கும் போதும் கூட சிகிச்சை முறையில் வலியை கட்டுப்படுத்த முதன்மை பராமரிப்பு சிகிச்சை அளிக்கப்படலாம். இதன் மூலம் வலியினால் உண்டாகும் அசெளகரியம் குறையக்கூடும்.
பிறகு உடல் பரிசோதனை மூலம் வலியின் இயல்புகளை கணக்கில் கொணடு அடுத்தகட்ட சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. வலி ஏற்படும் இடங்களில் சிதைவை பரிசோதிக்க நரம்பு பரிசோதனை செய்யப்படுகிறது. வலி உணர்வை கண்டறிய கருவிகளும் பயன்படுத்துகிறார்கள். கூடுதலாக எம்.ஆர்.ஐ அல்லது சரும திசு பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

அன்றாட வாழ்க்கை முறையில் உடலுக்கு வேலை கொடுக்கும் பணியும், உடற்பயிற்சியும் தேவையாக இருக்கிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே