அசுரன்’ படத்துக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் மிக முக்கியமானது: வெற்றிமாறன்

அசுரன்’ படத்துக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் மிக முக்கியமானது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இன்று (மார்ச் 22) மாலை 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. இதில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக ’அசுரன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதே படத்துக்காக நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பதாவது:

” ‘அசுரன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது பெரிய ஊக்கமாக இருக்கிறது. என்னைப் போன்ற ஆட்களுக்கு விருதுகள் எப்போதுமே ஊக்கத்தைக் கொடுக்கிறது. இந்தச் சமூக நீதிக்கான கதை மக்களிடையே போய்ச் சேர வேண்டும் என்பதுதான் முதல் எண்ணமாக இருந்தது. விருதுகள், தேசிய அளவிலான அங்கீகாரம், வணிகரீதியான வெற்றி உள்ளிட்டவை இந்த மாதிரியான படத்துக்கு மிக முக்கியமானது.

இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை தனுஷ் பெற்றிருப்பதிலும் மகிழ்ச்சி. இந்த வயதில் இரண்டு தேசிய விருதுகளை வேறு யாரும் வாங்கியதில்லை. சிவசாமி கதாபாத்திரத்துக்கு விருது என்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. 35 வயது நடிகர், 50 வயது நடிகராக நடிப்பது என்பது தனுஷ் மாதிரியான நடிகரால் மட்டுமே முடியும். அதை ரொம்ப இலகுவாக நடித்தது ரொம்பவே ஸ்பெஷலான விஷயம்.

எப்போதுமே படம் இயக்கும்போது விருதுகளுக்காக இயக்குவதில்லை. அந்தப் படத்தின் கதைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என நினைத்து இயக்குவேன். நான் எந்த விருது வழங்கினாலும் பாலுமகேந்திராவுக்குத்தான் சமர்ப்பிப்பேன். என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி”.

இவ்வாறு வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே