அஜித் படத்துக்காக தேசிய விருது; வாழ்த்திய விஜய்: நெகிழ்ச்சியில் இமான்

‘விஸ்வாசம்’ படத்துக்காகத் தேசிய விருது வென்றிருக்கும் இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

மார்ச் 23-ம் தேதி 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ‘அசுரன்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய படங்களுக்கு தலா 2 விருதுகளும், ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக விஜய் சேதுபதிக்கும், ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்களுக்காக இமானுக்கும், ‘கேடி (எ) கருப்புத்துரை’ படத்துக்காக நாக விஷால் என தமிழ்த் திரையுலகிற்கு மொத்தம் 7 விருதுகள் கிடைத்தன.

தேசிய விருது வென்றவர்களுக்குத் தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதில் ‘விஸ்வாசம்’ படத்தின் பாடல்களுக்காக தேசிய விருது வென்ற இமானுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் “வாழ்த்துகள்… தகுதியான விருது” என்று ட்விட்டரில் பதிவிட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்தால் நெகிழ்ந்த இமான் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, “இந்த வாழ்த்தை உங்களிடமிருந்து பெற்றது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். நீங்களும் இளையராஜா அவர்களும் என் வாழ்க்கையில் பெரிய உந்துசக்திகளாக இருந்திருக்கிறீர்கள். இறைவனுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். மேலும், தேசிய விருது வென்ற இமானுக்கு ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சிறிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“தேசிய விருது பெற்றதற்காக, ரஜினி சார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல் விஜய் அண்ணனும், அன்பு அஜித் அண்ணனும் எனக்குத் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்திருப்பதும் என்னை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. எனது இசைப்பயணம் விஜய் அண்ணனுடன் தான் தொடங்கியது. அவரது ‘தமிழன்’ படத்திற்குத்தான் நான் முதன்முதலாக இசையமைத்தேன். இப்போது ‘விஸ்வாசம்’ படத்திற்கு எனக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்துக்கு விஜய் அண்ணா வாழ்த்து தெரிவித்திருப்பது தனிச்சிறப்பானது.”

இவ்வாறு இமான் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே