5 கோடி பார்வையாளர்களை கடந்து பட்டையைக் கிளப்பும் “என்ஜாய் எஞ்சாமி“ பாடல்!

சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியிடப்பட்டது. இதில் சந்தோஷ் நாராயணனின் மகளும் பாடகியுமான தீ மற்றும் பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய இந்தப் பாடல் தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூடியூப்பில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது.

ஹாலிவுட்டில் ஆல்பம், சுயாதீனப் பாடல்களுக்கு பெருத்த வரவேற்பு இருப்பது போல இந்தியாவில் அத்தகைய வரவேற்பு இருப்பது இல்லை என்பது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான என்ஜாய் எஞ்சாமி சுயாதீனப் பாடல் இதுவரை 5 கோடி பார்வையாளர்களைப் பெற்று ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூர்வக்குடி மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்த சமூகத்தை எடுத்துக் காட்டும் இந்தப் பாடல் தற்போது நிலத்தை பறிக் கொடுத்து இருப்பதையும் அதோடு இயற்கை சூறையாடப் படுவதையும் மிக அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறது. இசையமைப்பு, பாடலுக்கு ஏற்ற குரல் என்பது மட்டுமல்லாது இந்தப் பாடலின் இயக்கமும் பெருத்த கவனத்தைப் பெற்று இருக்கிறது.

சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப்புயல் ஏர்.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் வெளியானதுதான் “என்ஜாய் எஞ்சாமி” என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பாடி இருக்கும் பாடகி தீ ஏற்கனவே “இறுதிச்சுற்று“ படத்தில் “உசுரு நரம்புல”, “காலா” படத்தில் “கண்ணம்மா“, “மாரி 2“ படத்தில் “ரவுடி பேபி ” போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். அதேபோல பாடகர் அறிவும் “காலா“ படத்தில் “உரிமை மீட்போம்“,“வட சென்னை“ படத்தில் “மத்திய சிறையிலே“, “மாஸ்டர்“ படத்தில் “வாத்தி ரெய்டு“ என பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே