பிரான்ஸில் கரோனா மூன்றாவது அலை: சில கட்டுப்பாடுகளுடன் தொடரும் ஊரடங்கு

பிரான்ஸில் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் கரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பிரான்ஸில் மூன்றாம் அலை தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரான்ஸில் 35,000க்கும் அதிகமானவர்களுக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கை சில கட்டுப்பாடுகளுடன் தொடர பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறும்போது, “கரோனா மூன்றாவது அலை அதிகரித்து வருகிறது. எனவே, சில கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கும். பள்ளிகள், வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவை இயங்கலாம். மக்கள் பொதுவெளியில் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவர். பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்குச் செல்ல நினைப்பவர்கள் அதற்குத் தகுந்த வலுவான காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே