ட்ரம்ப்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார்: மம்தா பானர்ஜி

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் சந்தித்ததைவிட மோசமான தேர்தல் முடிவை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பார் என மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

தமிழகம், கேரளா, மேற்குவங்கம், புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால், இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகளில் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் களை கட்டியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஹூக்லி மாவட்டம் ஷாகஞ்ச் பகுதியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர், “பிரதமர் நரேந்திர மோடி  மிகப்பெரியக் கலகக்காரர். வன்முறை மூலம் எதையும் சாதிக்க முடியாது. மோடியும், அமித் ஷாவும் நாடு முழுவதும் பொய்யையும், வெறுப்பையும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்ததைவிட மோசமான தேர்தல் முடிவை  மோடி எதிர்கொள்வார்.

இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தை நீங்கள் (பாஜக) விளையாட்டு மைதானமாக நினைத்தால், நான் கோல் கீப்பராக இருப்பேன். உங்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியாது. உங்களின் பந்து கோல் போஸ்ட்டைத் தாண்டி மேலே எழும்பிச் செல்லும்.

இந்த விளையாட்டில் மேற்குவங்க மக்கள் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும். பாஜக மேற்குவங்கத்தில் தோல்வியடைந்தால், நிச்சயமாக நாட்டிலிருந்து தூக்கி எறியப்படும். அவர்கள் விடைபெறுவது நிச்சயம்

பாஜகவில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. அந்தக் கதைகளை நான் இன்று வெளியே சொன்னால் பாஜகவினர் தலைகள் அவமானத்தில் கவிழும். ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் பெண்கள் தாயைப் போல் மதிக்கப்படுகிறார்கள். சகோதரியாக பாவிக்கப்படுகிறார்கள்” என்று பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே