தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சிறப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 5,409 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மே 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நோய்த்தடுப்புப் பகுதிகள் அல்லாத மற்ற பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நேற்று (மே 7) நிபந்தனைகளுடன் திறக்கப்பட்டன.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெண்களும், பொதுமக்களும் ஆங்காங்கே இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும், பல இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மதுப்பிரியர்கள் மது வாங்கிச் சென்ற சம்பவங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று (மே 8) தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சிறப்பு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 44 நாட்கள் ஆன நிலையில் மருத்துவர்களும், காவல்துறைப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி அரசு சொன்னதைக் கேட்டு, நடுத்தர மக்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர்.
ஏழைகள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து வாழ வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இத்தனை நாள் போராடி நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருந்ததையும் மக்களின் துயரங்களை மதிக்காமலும் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டு இருக்கின்றது அரசு.
இதைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் திறப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக இன்று சிறப்பு வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
இன்று மதியத்திற்குள் அவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.