வேட்பாளர் பட்டியலுடன் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்..!!

கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்தின் முன் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற உள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளிலும், மதிமுக 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளிலும், மக்கள் விடுதலை கட்சி ஒரு தொகுதியிலும், ஆதித்தமிழர் பேரவை ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

அதேபோல், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு தொகுதியிலும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

கூட்டணி கட்சியினர் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர் என்பது பல்வேறு சிக்கல்கள், இழுபறிக்கு நடுவே நேற்று (மார்ச் 11) இரவோடு இரவாக இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டன.

கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதிகள் தவிர்த்து, மீதமுள்ள 173 தொகுதிகளில் தனது வேட்பாளர்களுடனும், ஒட்டுமொத்தமாக 187 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும் திமுக போட்டியிடுகிறது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று (மார்ச் 12) வெளியாகிறது. இதனை முன்னிட்டு, காலை 10.30 மணியளவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் உள்ள கருணாநிதி உருவப்படத்தின் முன் வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும், தன் தாயார் தயாளு அம்மாளிடமும் அவர் ஆசி பெற்றார். மேலும், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே