மேற்குவங்க மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அதன் முடிவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சியின் தலைவரும், முதல்வர் வேட்பாளருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சுமார் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

மம்தா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட போதிலும், 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே அவரால் முதல்வராக தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதுபோன்ற நெருக்கடி நிலையில், தனது சொந்த தொகுதியான பவானிபூரில் போட்டியிட்டார்.

தொடர்ந்து, பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதிக்கு கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் தொடக்கம் முதலேயே முன்னணியில் இருந்து வந்தார்.

மொத்தமுள்ள 21 சுற்றுகளில் முடிவில் மம்தா பானர்ஜி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றார்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த நான் தான் தேர்தலில் ஆட்ட நாயகி என பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரியங்கா கூறும்போது, பல வாக்குச்சாவடிகளில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மோசடி வேலையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் வாக்குச்சாவடிகளில் மோசடியில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற, உங்கள் கட்சித் தலைவர்களை தயவுசெய்து அனுப்ப வேண்டாம் என நான் மம்தா பானர்ஜியை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன் என்று திப்ரேவால் கூறியுள்ளார்.

மக்களின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன், ஆனால் இந்த தேர்தலில் நான் என்னை தான் ‘ஆட்ட நாயகி’ என்பேன். ஏனென்றால், நான் மம்தா பானர்ஜியின் கோட்டையாக அறியப்படும் பவானிபூரில் போட்டியிட்டேன், முதலமைச்சரின் கோட்டையாக இருந்தாலும், மக்கள் பதிவான 57% வாக்குகளில் எனக்கு 25,000க்கும் அதிகமான வாக்குகள் அளித்துள்ளனர். மக்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நான் முழு மனதுடன் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பவானிபூரில் அடிமட்டம் வரை பாஜகவின் வலிமை இல்லாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய திப்ரேவால், “ஒரு தொகுதியில் வெல்வதற்கு அக்கட்சியின் பலம் அங்கு ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன், ஆனால் பவானிபூரில், எங்கள் கட்சியின் வலிமை அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் இதுபோன்ற முரண்பாடுகளையும் மீறி, பவானிபூரில் முதலமைச்சரே போட்டியிட்டு, தனது பதவியை தக்கவைக்க தனது முழு பலத்தையும் காட்டியபோதும், ஒரு புதிய இளம் வீரராக 25,000க்கும் அதிகமான வாக்குகளை என்னால், பெற முடிந்தது என்று அவர் பெருமையாக தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே