துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கொரோனாவுக்கு பயந்து மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் சூழலிலும், துப்புரவு பணியாளர்கள், போலீசார், மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

தங்களது உயிரையும் பொருட்படுத்தாது வேலை செய்து வரும் அவர்களின் சேவைக்கு ஏதும் ஈடாகாது.

அதனால் ஆங்காங்கே மக்கள் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயகுமார், துப்புரவு பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கிய சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை முருகன் சபை சார்பில், கரோனா பாதித்தவர்களுக்கென வழங்கும் உணவு தயாரித்தல் பணியை தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து திருமங்கலம் சென்ற அமைச்சர், 750 தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி ,வேட்டி, சேலை, கிருமிநாசினி, முகக்கவசங்களை வழங்கி அவர்களைப் பாராட்டினார்.

அதன் பின்னர் நீங்கள் தான் கடவுள் என்று கூறிக் கொண்டே அவர்களின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.

அப்போது, துப்புரவு பணியாளர்களில் சிலர் இப்போது வேலை செய்யும் அனைவரையும் பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, அரசு அதனை நிச்சயம் செய்யும் என அமைச்சர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே