மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லை; அதை பற்றி பேசுவது அவசியமற்றது – கமல்ஹாசன்

நடிகர் ரஜினிகாந்த் தனது உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒரு நண்பனாக சொல்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதிய தமிழகத்தை சீரமைக்க வேண்டும் என்று பேசி வருகிறோம், எனவே பத்திரிக்கையாளர்களை பாதுக்காக்க வேண்டியது எங்கள் கடமை என்றும், செய்தி சேகரியுங்கள், ஆனால் உயிர் தியாகம் செய்து சேகரிக்க வேண்டாம் எனவும் கூறினார்.

கடந்த 3 நாட்களாக நடைப்பெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உற்சாகம் அளித்ததாக கூறிய அவர், பூத் கமிட்டி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், மகளிர் தொண்டர்கள் அதிகளவில் மக்கள் நீதி மய்யத்திற்காக வேலை செய்து வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தில் உள்ளவர்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் உள்ள துவரிமான் என்ற ஊரில் உள்ள துவக்கப்பள்ளி சீரமைப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது போல் மேலும் சில பிறந்தநாள் பரிசுகள் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

நாமே தீர்வு என்ற கொள்கையுடன் மநீம செயல்பட்டு வருவதாகவும், அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினிகாந்துடன் தொடர்ந்து பேசி வருகிறேன் என்றும், அனைத்தையும் ஊடகத்திற்கு முன்னால் கூற முடியாது என்றார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு நண்பனாக கூறுவது, ஆனால் நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே என் எண்ணம் ஆனால் இதை பற்றி முடிவு செய்ய வேண்டியது நான் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்தார்.மேலும், மக்கள் நீதி மய்யம் தான் தமிழகத்தின் மூன்றாவது கட்சி என கூறிய அவர், நேர்மையே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை எனவும் குறிப்பிட்டார்.

கூட்டணி வைப்பது நல்லவர்களின் கூட்டணியாகவே இருக்கும் என கூறிய அவர், அப்படி நல்லவர்களின் கூட்டணி அமையும் போது இது முதல் அணியாக இருக்கும் என்றும், மனம் நொந்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் இங்கு வர இது ஒரு அழைப்பாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பழிபோடும் அரசியலாக இல்லாமல் வழிகாட்டும் அரசியலாக முன்னெடுப்போம் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

மநீம – திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக கட்சியின் தலைவரான எனக்கே தெரியவில்லை எனவும், சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும், மக்கள் நீதி மய்யத்தின் குரல் சட்டமன்றத்தில் நிச்சயம் எதிரொலிக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத புத்தகம் , அது குறித்து பேசுவது அவசியம் இல்லாதது எனவும், என்னுடைய ஆர்வம் எல்லாம் வேலை வாங்கி தருவது தான் என்றும், வேல் யாத்திரை வேண்டாம் என கூறினால் அது நல்லது தான் எனவும் அவர் தெரிவித்தார்.

நான் எதிலும் பி- டீமாக இருந்தது இல்லை எனவும், நான் எப்போதுமே ஏ- டீம் தான் எனவும், ஆரம்ப தேவையே மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது.

அதை கிடைக்க செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் முதல் நோக்கம் என்றும், தேர்தலின்போது பணம் பட்டுவாடா செய்யும் கட்சிகள் ஏன் மக்களுக்கு கோவிட் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யவில்லை ? எனவும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் எந்த மேடை கிடைத்தாலும் நான் மக்கள் பிரச்சனை குறித்து பேசுவேன் என கூறிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டதாகவும், நான் மக்கள் கண்ணில் எங்குபட்டாலும் அது ஊடகமாக இருந்தாலும் பிரச்சாரம் மேற்கொள்வேன் என்றும், பல் இல்லாத லோக்பாலுக்கு பல்லை கட்டுவது தான் முதல்வரானால் என் முதல் கையெழுத்தாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களை மக்கள் நீதி மையத்திற்கு அழைப்போம் என்றும், நல்லவர்களுக்கு எப்போதும் மக்கள் நீதி மையம் ஆதரவு அளிக்கும் எனவும், இதுபோன்ற சோகம் அவருக்கு மக்கள் நீதி மையத்தின் ஆட்சியில் ஏற்படாது என்றும், தமிழகத்தை மாற்ற வேண்டிய பணியில் ஊடகங்களும் இணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், மக்களுக்கு பிடித்தவர்களாக, மக்களுக்கு தெரிந்தவர்களாக தான் எங்களது வேட்பாளர்கள் இருப்பார்கள் என கூறிய கமல்ஹாசன், சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50% இடம் ஒதுக்க மக்கள் நீதி மய்யம் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நவம்பர் 26, 27, திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்திலும், டிசம்பர் 12,13 கோவை, சேலம் மாவட்டத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே