சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டுக்கு புகழ் பெற்றது. அங்கு ஆண்டுதோறும், பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், காணும் பொங்கல் தினமான இன்று அங்கு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டிருக்கிறது. போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன.
போட்டியின் போது காளைகள் சீறிப்பாய்ந்ததில் பலர் படுகாயம் அடைந்ததாகவும்; சிலர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பதைபதைக்கும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது மாடு முட்டியதாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்ததாகவும் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பார்வையாளர்கள், போட்டியாளர்கள் என 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிகிறது.