வட கிழக்கு பருவ காற்றின் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
நேற்று ராமநாதபுரம், புதுக்கோட்டை ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்தது. அதே போல இன்றும் இந்த இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் . வருகிற 20-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சென்னை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்த வானிலை ஆய்வு மையம், 20ஆம் தேதி வரை குமரி கடல் பகுதியில் பலத்த காற்று மாசுக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் இன்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகை பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன் காரணமாக வருகின்ற 19ஆம் தேதி வரை பூமத்தியரேகை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இன்று உருவாகலாம் என கணிக்கப்பட்ட நிலையில் காலதாமதமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.