விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட மாணவர்கள் 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 164 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு பள்ளியில் மதிய உணவு அளிக்கப்பட்டது. அப்போது உணவு சாப்பிட்ட மாணவர் ஒருவர் தான் சாப்பிட்ட உணவில் பல்லி இருப்பதாக தகவல் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உணவு சாப்பிட்ட 25 மாணவர்களை உடனடியாக மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 164 மாணவர்கள் பயில கூடிய பள்ளியில் முதற்கட்டமாக 25 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கிய நிலையில் ஒரு மாணவனின் உணவில் பல்லி இருப்பது தெரிய வந்ததை அடுத்து மற்ற மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படாமல் தவிர்க்கப்பட்டது. இதனால், சத்துணவில் பல்லி விழுந்தது தெரியாமல் இருந்திருந்தால் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இந்நிலையில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.