கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியல்..

அரசு மருத்துவமனைகளில் கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்டசிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட சில மருத்துவமனைகளில் தலா 500 படுக்கைகள் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 600-க்கும் மேற்பட்டோர் மற்றும் அறிகுறிகளுடன் சுமார் 2 ஆயிரம் பேர் இந்த சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கரோனா வைரஸை குணப்படுத்த மருந்துகள் இல்லாத போதிலும், கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனுடன், அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறது.

சென்னை அரசு பொது மருத்துவமனை ஊட்டச்சத்து நிபுணர் சுஜாதா தலைமையிலான குழுவினர் மருத்துவமனையிலேயே ஊட்ட சத்துள்ள உணவுகளைத் தயாரித்து கரோனா வைரஸ் பாதிப்புடன் சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறிய தாவது:

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தினமும் காலை 7 மணிக்கு இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொடுக்கிறோம்.

காலை 8.30 மணிக்கு 2 இட்லி, சாம்பார், வெங்காயச் சட்னி, சம்பா ரவை கோதுமை உப்புமா (அ) கிச்சடி, 2 வேக வைத்த முட்டை, பால் வழங்கப்படுகிறது.

காலை 10.30 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ்,

பகல் 12 மணிக்கு வெள்ளரிக்காய் சாலட் மற்றும் இஞ்சி, தோலுடன் கூடிய எலும்பிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து தருகிறோம்.

மதியம் 1.30 மணிக்கு 2 சப்பாத்தியுடன் புதினா சாதம் அல்லது வெஜிடபிள் சாதம், வேகவைத்த காய்கறிகள், கீரை, மிளகுரசம், உடைச்ச கடலை வழங்கப்படுகிறது.

மாலை 3 மணிக்கு மிளகு, மஞ்சளுடன், உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரும் மாலை 5 மணிக்கு பருப்பு சூப், சுண்டல் கொடுக்கின்றனர்.

இரவு 7 மணிக்கு 2 சப்பாத்தி சம்பா ரவை கோதுமை உப்புமா அல்லது கிச்சடி, வெஜிடபிள் குருமா, வெங்காய சட்னி, பால் வழங்கப்படுகிறது.

இரவு 9 மணி இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி கொடுக்கிறோம்.

இரவு 11 மணிக்கு மிளகு, மஞ்சளுடன், உப்பு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீர் வழங்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே இதுபோன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகள் கொடுக்கப்படுகின்றன.

இந்த உணவுகளை சாப்பிட்ட சிலர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து குணமடைந்துள்ளனர் என்று சுஜாதா தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே