மதுக்கடைகள் நாடு முழுவதும் திறப்பு…

கரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்ட சிவப்பு மண்டலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் பரவலாக இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் குடிமக்கள் காத்துக் கிடக்கின்றனர்.

தில்லி, சட்டீஸ்கர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 40 நாட்களுக்குப் பிறகு இன்று காலை மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் காட்சியைப் பார்க்க முடிந்தது.

தலைநகர் தில்லியில் தேஷ் பந்து குப்தா சாலையில் மதுக்கடை திறக்கப்பட்டதால், அப்பகுதியே மிகப்பெரிய சந்தை போல கூட்டம் அலைமோதுகிறது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை விட்டும், விடாமலும் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

கரோனாவையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுக்கடைகளின் வாயிலில் குவிந்திருக்கும் மக்கள் கூட்டம் குறித்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

சட்டீஸ்கர் மாநிலத்தில் சிவப்பு மண்டலத்தைத் தவிர பிற பகுதிகளில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இதனால் சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் முட்டி மோதியபடி மதுக்கடை வாயிலில் காத்து நிற்கும் மக்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே