நாளை இரவு எங்கெல்லாம் விளக்குகளை அணைக்க வேண்டும்: மத்திய அரசு புது உத்தரவு

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் வகையில் ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டுமே அணைக்கும்படி பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார், தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல், செல்லிடப்பேசி மூலம் விளக்குகளை ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, ஒரே சமயத்தில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு, மீண்டும் ஒரே சமயத்தில் மின் விளக்குகள் போடும் போது மின் அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு பிரச்னைகள் ஏற்படும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கருத்துகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மத்திய எரிசக்தித் துறை சார்பில் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..

அதில், பிரதமர் மோடி, ஏப்ரல் 5-ம் தேதி 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டுமே அணைக்கச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதே சமயம் தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம்.

வீட்டில் உள்ள கணினி, தொலைக்காட்சி, மின் விசிறி, குளிர்பதனப்பெட்டி, குளிர்சாதன இயந்திரம் உள்ளிட்டவற்றை வழக்கம் போல இயக்கலாம்.

வெறும் மின் விளக்குகளை மட்டுமே அணைக்க வேண்டும்.

அதே சமயம், மருத்துவமனைகள், பொதுவிடங்கள், அலுவலகங்கள், காவல்நிலையங்கள், உற்பத்தி ஆலைகள், ஆகியவற்றில் மின் விளக்குகளை அணைக்க வேண்டியதில்லை.

வீடுகளில் உள்ள மின் விளக்குகளை மட்டுமே அணைக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

எனவே, உள்ளாட்சி அமைப்புகள், தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே