ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதியளித்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், நன்றி தெரிவித்ததற்கு பதிலளித்த மோடி, ‘கொரோனாவுக்கு எதிராக இந்தியா எல்லாவற்றையும் செய்யும், நாம் ஒன்றாக வெல்வோம்,’ என பதிலளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பொருட்களை வழங்க அனுமதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உட்பட்ட 22 வகையான மருந்துப்பொருட்களை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கியது.
இதனால், அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கிடைக்க இருந்த சிக்கல் விலகியது.
இதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
அசாதாரண நேரங்களில் நண்பர்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் விவகாரத்தில் முடிவெடுத்த இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி. இதை மறக்க முடியாது.
கொரோனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் இந்தியாவுக்கு மட்டுமல்ல, மனிதநேயத்திற்கும் உதவுவதில் மோடியின் வலிமையான தலைமைக்கு நன்றி.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், டிரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் மோடி தனது டுவிட்டரில்,
“உங்களுடன் முழுமையாக உடன்படுகிறேன். இது போன்ற நேரங்கள் நண்பர்களை நெருக்கமாக்குகிறது.
இந்தியா-அமெரிக்க கூட்டு முன் எப்போதையும் விட வலுவானது.
கொரோனாவுக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்திற்கு உதவ இந்தியா எல்லாவற்றையும் செய்யும். இதை நாம் ஒன்றாக வெல்வோம்,” என பதிவிட்டுள்ளார்.