வேலூரில் அத்தியாவசிய சேவைகளுக்கு கட்டுப்பாடு!

வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணம் செய்யாத நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் ஆகியவை 3 நாட்கள் மட்டுமே திறக்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது.

இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வேலூரில் காய்கறி கடைகள், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்.

மளிகை கடை, சூப்பர் மார்க்கெட் ஆகியவை வாரம் மூன்று நாட்கள் அதாவது திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.

பெட்ரோல் விற்பனை நிலையங்கள், தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறந்திருக்கும். பால் விற்பனை நிலையம், தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் மட்டுமே செயல்படும்.

இறைச்சி கடைகள் ஊரடங்கு முடியும் வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பிரார்த்தனை செய்ய முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருந்துக்கடைகள் தினசரி வழக்கம் போல் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே