தொடர்ந்து கொரோனா இல்லா பச்சை மண்டலமாக கிருஷ்ணகிரி

தமிழகத்தில் இன்று கிருஷ்ணகிரியில் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டும், அம்மாவட்டம் பச்சை மண்டலத்தில் நீடிப்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று புதிதாக 231 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 174 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மொத்தம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1257 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தொற்று கண்டறியப்பட்டவர்களில் 158 பேர் ஆண், 72 பேர் பெண், ஒருவர் திருநங்கை ஆவர்.

சென்னையைச் சேர்ந்த திருநங்கைக்கு வயது 46. கோயம்பேடு மார்க்கெட்டில் அவருக்கு தொற்று பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த 76 வயது மூதாட்டிக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர் இன்று ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்று 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1341 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் இதுவரை 223 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவையில் 127 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

இன்று வரை 2099 பேர் வார்டுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று வரை, பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் இன்று ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

இதனால், அம்மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அம்மாவட்டம் பச்சை மண்டலத்திலேயே நீடித்தது.

இது தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், புட்டபர்த்தியில் இருந்து திரும்பியவர் சேலம் மாவட்ட எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதால், அவர் சேலம் மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே