கரூரில் திமுக- அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் 19 பேர் காயமடைந்தனர். திமுகவினர்மீது நடவடிக்கைக்கோரி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் நகராட்சி மாவடியான் கோயில் தெருவில் நேற்று இரவு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரச்சாரத்திற்கு வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் இரவு 10 மணிக்கு மேலாகி விட்டதாகக் கூறி அவர் வாகனத்தை தடுத்துள்ளனர்.

இதனால் திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து திமுக, அதிமுக என இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் 16 பேரும், திமுகவினர் 3 பேரும் காயமடைந்தனர். 

அதிமுகவினர் தனியார் மருத்துவமனையிலும், திமுகவினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்செய்தியாளர்களிடம், திமுகவினர் அராஜகசெயல்களில் ஈடு படுகின்றனர்.

தோல்வி பயம் காரணமாக செந்தில்பாலாஜி தேர்தலை நிறுத்த சதி செய்கின்றார் என்றார். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கரூர் பேருந்து நிலையரவுண்டானா அருகே இன்று (மார்ச் 21ம் தேதி) அதிமுக கரூர் நகர மத்தியசெயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிமுகவினர் தாக்கியதில் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் திமுகவினரை மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ”முதல்வர் பழனிசாமி தேர்தல் விதிகளை மீறிசெயல்படுகிறார் என்றால் அமைச்சர்களும் தேர்தல் விதிகளைமீறி வருகின்றனர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்பேன் ” என்று குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே