ஜெயலலிதாவாக கங்கனா… பரபரக்க வைக்கும் தலைவி ட்ரெய்லர்

கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு ‘தலைவி’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் கேரக்டரிலும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பாகுபலி படத்தின் கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

தலைவி திரைப்படத்தில் கங்கணா ரணாவத் நான்கு தோற்றங்களில் நடிப்பதால் அவருக்கு ஒப்பனை செய்ய கேப்டன் மார்வெல் படத்தில் பணியாற்றிய ஜேசன் காலின்ஸை படக்குழு ஒப்பந்தம் செய்தது. அதேபோல் ஜெயலலிதா கேரக்டரில் அச்சு அசலாக தோன்ற உடல் எடையைக் கூட்டிய கங்கனா, பரதநாட்டியத்தையும் கற்றுக் கொண்டார்.

ஏப்ரல் 23-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை இன்று கங்கனா ரனாவத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா திரைப்படங்களில் இருந்து அரசியலுக்கு வந்தது, அவர் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘குயின்’ வெப் தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே