ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #KamalNath : வலுக்கும் கண்டனங்கள்..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., பெண் வேட்பாளரை ‘ஐட்டம்’ என விமர்சித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத்திற்கு சமூகவலைதளமான டுவிட்டரில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

மத்திய பிரதேசத்தில் காங்., கட்சியிலிருந்து 21 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்து பாஜ.,வில் சேர்ந்தனர்.

இதனால் கமல்நாத் தலைமையிலான காங்., ஆட்சி கவிழ்ந்து, சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜ., ஆட்சியை பிடித்தது.

ராஜினாமா செய்யப்பட்ட தொகுதிகளில் நவ.,3ல் இடைத்தேர்தல் நடக்கிறது.

இதற்காக தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாகி உள்ளன.

இந்நிலையில், காங்.,கில் இருந்து பாஜ.,விற்கு சென்ற முன்னாள் பெண் அமைச்சர் இமர்தி தேவிக்கு இடைத்தேர்தலில் பாஜ., வாய்ப்பளித்துள்ளது. 

அவரை எதிர்த்து போட்டியிடும் காங்., வேட்பாளருக்கு ஆதரவாக டாப்ரா பகுதியில் கமல்நாத் பிரசாரம் செய்தார்.

அப்போது கமல்நாத் பேசுகையில், ‘எங்கள் வேட்பாளர் மிகவும் எளிமையானவர். எதிரணியில் இருப்பவரைப் பற்றி என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த “ஐட்டத்தை ” நான் பெயர் சொல்ல வேண்டுமா?’ என்றார்.

கமல்நாத்தின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சமூகவலைதளமான டுவிட்டரில் பலரும் அவருக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் டுவிட்டரில் கமல்நாத் டிரெண்டிங்கில் வந்தார்.

ஏழை குடும்பத்தில் பிறந்து அமைச்சர் வரை உயர்ந்த ஒரு பெண்ணை இப்படியா தரம் தாழ்ந்து இழிவாக பேசுவது.. பெண்ணை மதிக்க தெரியாத கமல்நாத்தை உடனடியாக கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் ஒரு பெண்ணான சோனியா இதை உடனடியாக செய்ய வேண்டும் என பலரும் சோனியாவிற்கு டேக் செய்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே