ஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..!!

புதிய கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைப்பதாக நேற்று அறிவித்த வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலி பாதுகாப்பானது என பயனர்களுக்கு ஸ்டேடஸ் வைத்து தெரியப்படுத்தி வருகிறது.

ஃபேஸ்புக்கால் நிர்வகிக்கப்பட்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர் தரவுகளை ஃபேஸ்புக்கின் பிற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையிலான புதிய கொள்கையை சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி வாட்ஸ் அப் பயனர் தரவுகளை வணிக நோக்கில் பயன்படுத்த முடியும் என கூறப்படுகிறது.

மேலும் தங்களின் கொள்கையை ஏற்காதவர்களால் பிப்ரவரி 8-ம் தேதிக்கு பின்னர் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது எனவும் வாட்ஸ் அப் தெரிவித்தது.

இதன் மூலம் வாட்ஸ் அப் பயனாளர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் என அதனை பயன்படுத்துபவர்களிடையே அச்சம் மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

இதனிடையே இனி வாட்ஸ் அப்பை நம்பி பயன் இல்லை என முடிவெடுத்த அதன் பயனாளர்கள் பிற செயலிகளை நாடிச் சென்றனர்.

அந்த வகையில் சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட பிற மெசெஞ்சர் செயலிகளின் டவுன்லோட்கள் லட்சக்கணக்கில் அதிகரித்தது.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ் அப் நிறுவனம் எதிர்ப்பை சந்தித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாட்ஸ் அப் நிறுவனம் தனது முடிவில் திடீரென பின்வாங்கியது.

தங்களது புதிய கொள்கை தொடர்பாக மக்களிடையே தவறான தகவல் பரவுவதாகவும், அதனை நீக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதால், மே 15ம் தேதி வரை புதிய கொள்கையை ஆராய்ந்து பயனாளர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கலாம் என , வாட்ஸ்-அப் நிறுவனம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இன்று தனது பயனர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்நிறுவனம் ஸ்டேடஸ் வைத்துள்ளது. இது அனைத்து பயனர்களுக்கும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அதில் உங்களின் தனியுரிமை எங்களுக்கு முக்கியது. எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன் என்பதால் உங்களின் தனிப்பட்ட உரையாடல்களை பார்க்கவோ, உங்களின் அழைப்புகளை கேட்கவோ எங்களால் முடியாது, நீங்கள் ஷேர் செய்யும் லொகேஷன்களை எங்களால் பார்க்க முடியாது, உங்களின் தொடர்பு எண்களை ஃபேஸ்புக்குடன் பகிர மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே