பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜோதிராத்திய சிந்தியா சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசுக்கு எதிராக ஜோதிராத்திய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேர் போர்க்கொடி உயர்த்தி, பெங்களூரில் தங்கியுள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதிருப்தியாளர்கள் அங்கு சென்றபோதே, இதில் பாஜக கைவரிசை இருக்கலாம் என்ற பேச்சு எழுந்தது.
இந்த நிலையில், ஜோதிராத்திய சிந்தியா, இன்று காலை பிரதமர் மோடியை டெல்லியிலுள்ள அவர் இல்லத்தில் சென்று சந்தித்தார். அப்போது அமித் ஷா உடனிருந்தார்.
பாஜகவில் ஜோதிராத்திய சிந்தியா இணைந்து பிறகு, பாஜக ஆதரவோடு, முக்கிய பதவியை பிடிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில்தான், காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக ஜோதிராதித்ய சிந்தியா, கட்சி தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
18 வருடங்களாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்துள்ளேன். இப்போது விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிராத்திய சிந்தியா ஒரு இளம் தலைவர். அவர் உழைப்பால்தான் ம.பியில் காங்கிரஸ் நூலிழையில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.
ஆனால், சீனியர் தலைவரான கமல்நாத்தை, முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. எனவே தீவிர அதிருப்தியிலிருந்த ஜோதிராத்திய சிந்தியா, மோடியை சந்தித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.