#Jyothika : தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை ஜோதிகா….

நடிகை ஜோதிகா அகரம் அறக்கட்டளை சார்பாக 25 லட்சம் ரூபாயை தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு நிதியுதவியாக அளித்துள்ளார்.

நடிகை ஜோதிகா ராட்சசி படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, தஞ்சையில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான போதிய வசதிகள் இல்லாமல் இருப்பது குறித்து கேட்டறிந்துள்ளார். இதுகுறித்து ஒரு நட்சத்திர விழா நிகழ்ச்சியிலும் பேசினார்.

அப்போது அவர் பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது. கோயிலுக்கு காசு கொடுப்பது போல அரசு மருத்துவமனைக்கும் காசு வழங்க வேண்டும் என்றும், தான் தஞ்சை மருத்துவமனையை சென்று பார்த்து போதிய வசதி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

பலரும் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் அவர் கோயில் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜோதிகாவின் கணவர் சூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளை மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஆலோசனை நடத்திய பின்னர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரையின் ஒப்புதலைப் பெற்று இந்த உதவியை அவர் செய்துள்ளார்.

பிரசவம் வார்ட் பிரிவுக்கு தேவையான உபகரணங்களையும், குழந்தைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் அவர் வாங்கி வழங்கியுள்ளார்.

ஜோதிகா சார்பில் திரைப்பட இயக்குநர் சரவணன் இந்த பொருட்களை வழங்க, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவற்றை பெற்றுக் கொண்டார்.

ட்விட்டரில் பலரும் ஜோதிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதோடு #jyothika -வை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே