JNU வன்முறைக்கு காரணமான 9 முகமூடி அணிந்த நபர்களின் புகைப்படங்கள் வெளியீடு

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகிக்கப்பட்ட முகமூடி அணிந்து இருந்த 9 நபர்களின் புகைப்படங்கள் டெல்லி காவல் துறை வெளியிட்டு உள்ளது.

ஜே.என்.யூ வன்முறை குறித்து டெல்லி போலீசார் இன்று முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

ஜே.என்.யு வளாகத்தில் வன்முறை செய்த 9 முகமூடி அணிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டி.சி.பி ஜாய் டிர்கி தெரிவித்தார்.

அதில் 7 மாணவர்கள் இடதுசாரி ஆதரவாளர்கள் மற்றும் 2 மாணவர்கள் வலதுசாரியை சேர்ந்தவர்கள்.

வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் பட்டியல் வெளியிடப்பட்டது.

ஜே.என்.யூ. வன்முறைகள் தொடர்பாக டெல்லி டிசிபி ஜாய் டிர்கி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜே.என்.யூ. வளாகத்தில் சிசிடிவி காட்சிகள் கிடைக்கவில்லை. சிசிடிவி கேமராக்களுக்கான சர்வர் அறை முதல் நாள் சூறையாடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்ட வைரல் வீடியோக்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் சிலரை அடையாளம் கண்டிருக்கிறோம்.

ஜே.என்.யூ. வன்முறைகளுக்கு காரணம் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயிஷி கோஷ், முதுகலை மாணவர் விகாஸ் பட்டேல், பங்கஜ் மிஸ்ரா, முன்னாள் மாணவர் சுன்சூன் குமார், பிஎச்டி மாணவர் யோகேந்திர பரத்வாஜ், டோலன் சமந்தா, சுசீதா டலுக்டர், பிரியா ரஞ்சன், வாஸ்கர் விஜய் ஆகியோர்தான்.

ஜனவரி 1 முதல் 5-ந் தேதி ஜே.என்.யூ. மாணவர்களை ஆன்லைனில் பதிவு செய்ய நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

ஆனால் எஸ்.எப்.ஐ. ஏ.ஐ.எஸ்.எப், ஏ.ஐ.எஸ்.ஏ, டிஎஸ்எப் ஆகிய அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இவ்வாறு ஜாய் திர்கே கூறினார். மேலும் வன்முறையில் சந்தேக நபர்கள் ஈடுபட்டதாக கூறப்படும் படங்களையும் அவர் வெளியிட்டார்.

ஆனால் தம் மீதான டெல்லி போலீசாரின் குற்றச்சாட்டுகளை ஜே.என்.யூ. மாணவர் சங்கத்தின் தலைவர் ஆயிஷ் கோஷ் மறுத்துள்ளார்.

மேலும் போலீசார் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள படத்தில் இருப்பது நான் இல்லை. என்னை தாக்கியவர்கள் யார் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்றும் ஆயிஷ் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதனிடையே ஆயிஷ் கோஷ் உள்ளிட்ட மாணவர் சங்கப் பிரதிநிதிகளை மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சக செயலாளர் அமித்கரே இன்று சந்தித்து பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே