இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
புத்தாண்டு கொண்டாட தயாராக இருந்த ஜகார்தாவிற்கு, டிசம்பர் 31ஆம் தேதி மறக்க முடியாத நாளாக அமைந்தது.
அந்த ஒரு நாளில் மட்டும் சுமார் 377 மில்லி மீட்டர் அளவுக்கு அதி தீவிரமழை பொழிந்தது.
மழையின் ருத்ர தாண்டவத்தால் ஜகார்தா நகரின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்ததோடு, தங்குவதற்கு இடம் இல்லாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
குடியிருப்புகள், நிறுவனங்களுக்குள் வெள்ளநீர் நுழைய நகரை இணைக்கும் சாலைகளும், ரயில்வே தண்டவாளங்களும் கடுமையான சேதத்தை சந்தித்தன.
இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரவைப்பதிலும் சிக்கல் நிலவியது.
அதிதீவிர கனமழை காரணமாக ஜகார்தா நகரில் 20-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நகர் முழுவதும் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் ஜகார்தாவை விட்டே வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயரம் குறித்து வருத்தம் தெரிவித்த அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ, வெள்ள தடுப்புக்கான உள்கட்டமைப்பு வசதிகளை முடிக்காததே இவ்வளவு சேதம் உருவானதற்கு காரணம் என கூறியுள்ளார்.
ஏற்கனவே கடல் மட்டம் உயர்வதால் கொஞ்சம், கொஞ்சமாக மூழ்கி வரும் ஜகார்தா நகரம் 2050-ஆம் ஆண்டுக்குள்ளாக முழுவதுமாக அழிந்துவிடும் என ஆய்வு குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இப்படி இருக்கையில் ஜகார்தாவின் வெள்ள பாதிப்பு அங்குள்ள மக்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருநாள் மழையால் உண்டான வெள்ளத்தால் ஒட்டுமொத்த ஜகார்தாவே துயரத்தில் மூழ்கியுள்ளது.