காயமடைந்த தந்தையை 1200 கி.மீ., சைக்களில் அழைத்து வந்த 15 வயது சிறுமியை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் பாராட்டியுள்ளார்.
பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த, மோகன் பஸ்வான். டில்லி அருகேயுள்ள கூர்கானில் இ-ரிக் ஷா ஓட்டி வருகிறார். அவரது மனைவி, தர்பங்காவில் அங்கன்வாடி ஊழியராக உள்ளார்.
அவர்களுக்கு ஜோதி(15) மற்றும் 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டில்லியில் மோகன் சாலை விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதால் தந்தையை பார்க்க, ஜோதி வந்துள்ளார்.
ஆனால், அதற்குள் ஊரடங்கு அமலானதால், தந்தையுடனேயே ஜோதி தங்கியுள்ளார்.
அதேநேரத்தில் வீட்டு உரிமையாளர், அவர்களை காலி செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், சைக்கிள் மூலம் ஊர் திரும்ப முடிவு செய்தார்.
இதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கடனாக வாங்கி, சைக்கிள் ஒன்றை வாங்கிய ஜோதி, தந்தையை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பினார்.
ஜோதி சைக்கிள் ஓட்ட, பின்னால் மோகன் அமர்ந்து கொண்டார். எட்டாவது நாளில் குர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.
சைக்கிளில் சொந்த ஊர் திரும்பிய ஜோதியின் கதை கேட்டதும், அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள், சிறுமியை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கியுள்ளனர்.
ஊரடங்கு முடிந்த பின்னர் ஜோதிக்கு உதவுவதாகவும், 9ம் வகுப்பில் படிக்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
ஜோதி குமாரி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதைப்பார்த்த இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு, ஊரடங்கு முடிந்தவுடன் தங்களின் சொந்த செலவில் ஜோதி குமாரியை டில்லிக்கு அழைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்த செய்தியைப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜோதி குமாரியின் புகைப்படத்தை பகிர்ந்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 கி.மீ தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை, இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.