‘சில்லுக்கருப்பட்டி’ போலவே இது ஒரு அச்சுவெல்லம்- ‘ஏலே’ படத்துக்கு புகழாரம் சூட்டிய சேரன்

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஏலே’. சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை புஷ்கர் – காயத்ரி ஜோடி தயாரித்துள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டின் போது, திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதலால் இப்படம் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த வாரம் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்தை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் ‘ஏலே’ படத்தை பார்த்த இயக்குநர் சேரன் படக்குழுவினரு பாராட்டு தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து சேரன் கூறியுள்ளதாவது:

ஏலே…. எத்தனை பேர் பார்த்தீங்க நெட்ஃப்ளிக்ஸ்ல. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்கள். மிகப் பிரமாதமாக அதேசமயம் உண்மையாக வடிவமைக்கப்பட்ட புதிய கதாபாத்திரம் தம்பி சமுத்திரக்கனிக்கு. அந்த கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு அப்பா மகனுக்கான உணர்வுகளை பார்வையாளனுக்கு கடத்துவது கிரேட்.

தவமாய் தவமிருந்து போன்ற அப்பாக்களின் மனதை அளந்துவிடலாம். இதுபோன்ற அப்பாக்களின் மனதில் கிடக்கும் அவலங்களை அலசுவதும் அவருக்காக கண்ணீர்விட வைப்பதும் சாத்தியம் குறைவான விசயம்.. அதில் வென்றிருக்கிறார் ஹலீதா சமீம். திரையில் யூகிக்க முடியாத கதாபாத்திரங்களை கையாளுவதன்மூலம்தான் புதிய சினிமாக்கள் உருவாகும்.. அப்படிப்பட்ட ஒரு சினிமாதான் ஏலே.. சில்லுக்கருப்பட்டி போலவே இது ஒரு அச்சுவெல்லம்.. சமுத்திரக்கனி மூன்று மாதிரியான கதாபாத்திரங்களை வெளுத்து வாங்கியிருக்கிறான். இதெல்லாம் ஹீரோக்கள் செய்ய மறுக்கும் கதாபாத்திரங்கள். செய்து காட்டியிருக்கிறான் தம்பி.

இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே